ஒரு நாள் காலையில் ஒரு குருவானவர் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து சபையாரைக் கடுமையாய்க் கண்டித்துணர்த்திப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஓர் அங்கத்தினர் ஆராதனையின் முடிவில் அக்குருவானவரிடம் சென்று, ஐயா, நீங்கள் இவ்வளவு காரசாரமாகவும், வெளிப்படையாகவும் பாவத்தைக் குறித்துப் பகிரங்கமாய்ப் பேசவேண்டியதில்லை. காரணம் எங்களுடைய வாலிபப் பையன்களும் பெண்களும் பாவங்களைக் குறித்து வெளிப்படையாய் அறிந்துகொண்டால் அவர்கள் வெகு எளிதில் பாவிகளாகிவிடுவார்கள். வேண்டுமானால் பாவத்தைப் பாவம் என்று சொல்லாது, அதனை ஒரு குற்றம் என்று சொல்வீராக. ஆனால் பாவத்தைக் குறித்து இவ்வளவு பகிரங்கமாய்ப் பச்சையாகப் பேசவேண்டாம் என்றார்.
உடனே அக்குருவானவர் தன்னுடைய மருந்துப் பெட்டியில் நஞ்சு என்று தீட்டப்பட்டிருந்த ஒரு விஷ மருந்தை எடுத்து வந்து, அந்த அங்கத்தினரிடம் காட்டி, ஐயா, நான் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அறிகிறேன். நஞ்சு என்று தீட்டப்பட்ட சீட்டை இந்த மருந்துப் புட்டியிலிருந்து எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேன் என்ற பெயரை அல்லது யாவரும் விரும்பும் இன்னொரு இனிய பெயரை, அதே நஞ்சு நிறைந்த புட்டியின்மேல் எழுதச் சொல்லுகிறீர். அதே நஞ்சை எவ்வளவு தூரம் இனிப்பான மருந்து என்று எழுதுகிறேனோ அவ்வளவு தூரம் ஆபத்தாக முடியும். நஞ்சு நஞ்சுதான். நஞ்சுதனை நஞ்சு என்று வெளியரங்கமாய், தெளிவாக வெகு திட்டவட்டமாய்க் கூறாவிட்டால் ஆபத்து நேரிடும். அது வஞ்சகமாகும். உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும். இல்லாததை இல்லாததென்று சொல்லவேண்டும். பாவத்தைப் பாவம் என்று சொல்லிப் பகிரங்கமாய்க் கண்டித்துணர்த்த வேண்டும். பாவத்தைக் குறித்து ஏனோதானோவென்று அசட்டையாயிருக்கிறவர்கள் மோசம் போவது திண்ணம்.
தற்காலத்தில் பாவத்தின் பயங்கரத்தையும் ஆபத்தையும் நாம் சரியாய் உணருகிறதில்லை. பாவம் மனிதனைக் கொல்லும் தன்மையுடையது. இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று வெளிப்படையாய்க் கூறாது, தற்காலத்தில் அதனை இலேசாக மதித்து, அப்பாவத்தோடு விளையாடி, அப்பாவத்தை இயற்கையான குற்றமென்றும், மனித பலவீனமென்றும், ஏதோ தவறுதல் என்றும் இலேசாக அதனைச் சாக்குப்போக்குச் சொல்லி நிர்விசாரமாக இருந்துவிடப் பார்க்கிறோம். ஆனால் சத்திய வேதாகமம் பாவத்தின் பயங்கரத்தையும், பாவம் விளைவிக்கும் மரணத்தையும் வெகு திட்டவட்டமாய் வெளிப்படுத்தியிருப்பதுபோல, நாமும் பாவத்தைப் பாவம் என்று கூறிப் பகிரங்கமாய் முகதாட்சண்யமின்றி கண்டித்துணர்த்த வேண்டும்.